வியாழன், 17 நவம்பர், 2016

அறிவுச்சிறகு விரி: கட்டற்ற மென்பொருட்கள்

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766


நாம் இலட்சக்கணக்கில் செலவிட்ட பயன்படுத்தும் மென்பொருட்கள் ஒரு காசு செலவின்றி கிடைக்கின்றன என்பது நமக்குத் தெரியுமா? இத்தைகைய மென்பொருட்கள் குறித்து அறிவது நம்மை ஓர் விடுதலை உலகிற்கு இட்டுச்செல்கின்றது.

மென்பொருட்களின் பயன்பாட்டு உரிமைகளைத் தெரிந்து கொள்வது ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் பயன்பாட்டையும் அவற்றின் மேம்படுத்துதலுக்கும் உதவும் ஒன்றாகும். மென்பொருட்களை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம் அவை 1. (proprietary software) மென்பொருட்கள் எனவும் 2. கட்டற்ற மென்பொருள் (free software) எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

மென்பொருட்களை கட்டற்ற உரிமத்தில் வெளியிடுவதற்கான உரிமைகளை படைப்பாக்கப் பொதுமம் (creative commons) குனு (GNU) என்று இரு வகைப்படும். கட்டற்ற மென்பொருட்கள் நான்கு வகையான தளையறு நிலைகளைப் பயனர்களுக்கு வழங்குகிறது. இவற்றில் படைப்பாக்கப் பொதுமம் என்பது நூல்கள், ஒளிப்படங்கள், அசைவூட்டப்படங்கள், காணொலிகள், ஒலிக்கோப்புகள் போன்றவற்றிற்கு வழங்கப்பெறும் படைப்பாக்கப் பொதும உரிமம் ஆகும். மென்பொருட்களுக்கு வழங்கப்படும் படைப்பாக்கப் பொதும உரிமம் குனூ ஆகும்.
படைப்பாக்கப் பொதும உரிமம் CC BY SA (creative commons share alike)என்று குறிக்கப்பெறுகின்றது. CC BY SA படைப்பாக்கப் பொதும உரிமம் 1.0 என்று தொடங்கி 2.0. 3.0, 4.0 என்று அதன் பதிப்பு வடிவங்கள் மாற்றமடைந்துள்ளன. குனு (GNU) என்னும் உரிமம் 1.0, 2.0 ஆகிய பதிப்பு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    தளையறு நிலை 0 - எத்தகைய நோக்கத்திற்காகவும் மென்பொருளைத் தொழிற்படுத்துவதற்கு /பயன்பத்துவதற்கான தளையறு நிலை ஆகும்.    தளையறு நிலை 1  என்பது, மென்பொருள் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கற்றுக்கொள்ளவும், உங்கள் தேவைகளுக்கேற்ப அதனை உள்வாங்கிக்கொள்ளவும் தடுக்காத தளையறு நிலை ஆகும். ஆணை மூலத்தைப் பார்வையிட அனுமதித்தல் இதற்கான முன் நிபந்தனை ஆகும்.   தளையறு நிலை 2  என்பது, நகல்களை மீள வழங்க செய்வதற்கான தளையறு நிலை ஆகும். இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவமுடியும்.     தளையறு நிலை 3 - மென்பொருளை மேம்படுத்துவதற்கும், மேம்பாடுகளைப் பொதுமக்களுக்கு வெளியிடுவதற்குமான தளையறு நிலை ஆகும். இதன்மூலம் மொத்த சமுதாயமும் பயன்பெறுகிறது. இவ்வாறு வழங்கப்படும் மென்பொருள்களின் நிரல் மூலம் (source code) பார்வைக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இதற்கான முன்நிபந்தனை ஆகும்.

எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த, படியெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மறு பகிர்வு செய்யப்படக்கூடிய மென்பொருளாகும். மென்பொருட்களுக்கான கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையுறுதலே இதன் அடிப்படைக் கொள்கையாகும். கட்டற்ற மென்பொருள் என்பதற்கு எதிர் நிலையிலுள்ளவை தனியுரிமை மென்பொருட்களாகும் (proprietary software). மென்பொருட்களை விலைக்கு விற்றல் என்பது கட்டற்ற மென்பொருள் தத்துவத்தின் படி தவறான செயல் அல்ல.

பொதுவாக மென்பொருள் ஒன்று கட்டற்ற மென்பொருளாக வழங்கப்படுவதற்கு, அம்மென்பொருளானது கட்டற்ற மென்பொருள் உரிம ஒப்பந்தம் ஒன்றோடு வழங்கப்படுகிறது. அத்தோடு, இருமக்கோப்புக்களாக வழங்கப்படும் மென்பொருட்களுக்கு, அவற்றின் ஆணைமூலமும் சேர்த்தே வழங்கப்படுகிறது.

அச்சு, ஊடகப்பணிகளின் பொருட்டு பயன்படுத்தப்படும் கோரல்டிரா, போட்டோசாப், இல்லசுட்டுரேட்டர் ஆகிய மென்பொருட்களை ஆயிரக்கணக்கில் செலவு செய்து நாம் கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் இம்மென்பொருட்களுக்கு இணையாக கட்டற்ற முறையில் ஒளிப்படத்தொகுப்புப் பணிகளுக்காக ஜிம்ப் -https://www.gimp.org/  என்னும் கட்டற்ற மென்பொருளும், கோரல்டிராவிற்கு இணையாக வரைலைப்பணிகளின் பொருட்டு https://inkscape.org/en/ என்னும் மென்பொருளையும் அசைவூட்டப்படங்களின் தொகுப்புப் பணிகளுக்காக மாயா என்னும் மென்பொருளுக்கு நிகராக https://www.blender.org/ என்னும் மென்பொருளினையும் பயன்படுத்தலாம். நம் இல்லத்திற்கான அழகிய வடிவமைப்பினை http://www.sweethome3d.com/ என்னும் மென்பொருளினால் செய்யலாம்.


நம்மை கட்டற்ற உலகிற்கு அழைத்துச்செல்ல ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்கள் காத்திருக்கின்றன. அவற்றை அறிவோம், பகிர்வோம், அறிவாயுதங்களை உருவாக்கும் மென்பொருட்களை உருவாக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக